முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 26 மாத பதவிக்காலத்தில் மேற்கொண்ட 33 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1,010 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதேபோன்ற காலப்பகுதியில் மேற்கொண்ட 8 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 31.7 மில்லியன் ரூபாவையே செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
2022 செப்டெம்பர் 17ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்திற்கான பயணத்திலிருந்து 2024 ஜூன் 8ஆம் திகதி இந்தியாவிற்கான பயணம் வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட 33 வெளிநாட்டுப் பயணங்களிலும் மொத்தமாக 421 பேர் அவருடன் சென்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு மாறாக, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதல் 26 மாத பதவிக்காலத்தில் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், அவற்றுக்காக மொத்தம் 31.7 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடைய மேலதிக கொடுப்பனவுகளையோ அல்லது ஒருங்கிணைந்த கொடுப்பனவுகளையோ தற்போதைய ஜனாதிபதி கோரிப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
