(எம்.மனோசித்ரா)
துயரமான மரணங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகக் கடுவலை மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
கடுவலையில் தீவிபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிகழ்ந்த உயிரிழப்புகளுக்காகக் கடுவலை மேயராகவும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை, கடுவலை மாநகர சபைக்குத் தீயணைப்புப் பிரிவு ஒன்றை அமைக்க கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த வாரம் கோட்டை மாநகர சபையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளோம். அதன்படி முதற்கட்டமாக கோட்டை மாநகர சபை தீயணைப்புப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த எதிர்க்கட்சியினர், மகாவலி திட்டம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் கூறினாலும், தங்களது ஆட்சிக் காலத்தில் கடுவலை மாநகர சபைக்கு ஒரு தீயணைப்புப் பிரிவைக்கூட வழங்கவில்லை.
கடுவலை மாநகர சபை ஆட்சிக்கு வந்து ஓராண்டான நிலையில், தாங்கள் முன்வைத்த யோசனை மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி அரசியல் செய்வது அருவருக்கத்தக்கது.அரசியல் செய்திகள்
கடுவலை பகுதியில் கடந்த காலங்களில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான கட்டட வரைபடங்கள் தரநிலைகளின்றி அனுமதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியில் தெரியப்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்பைக் கட்டடங்களில் அமைக்காமல் வரைபடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தங்களது கடந்த காலத் தவறுகளை மறைக்கவே மரணங்களை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.
மேலும், கடுவலை நகரத்தை முறைப்படுத்தப் பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹோமாகம மற்றும் மஹரகம ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எமது அபிவிருத்தித் திட்டத்திலும் தீயணைப்புப் பிரிவு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக உடனடியாகச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்றார்.
