சவூதி அரேபியாவின் மரண தண்டனையிலிருந்து சிவராஜா அனோஜனை விடுவிப்பதற்காக செயற்பட்டது போன்று இந்தியாவின் திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நுவரெலியாவினைச் சேர்ந்த யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறங்கவுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பேச்சினைத் தொடர்ந்து சென்னையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடியதாகவும் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி சென்னை செல்லவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் .
இந்த விஜயத்தின் போது சந்திக்க வேண்டிய முக்கிய நபர்களுடனான சந்திப்புக்களுக்கான ஏற்பாடுகளை சென்னையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் .
இறைவனின் உதவியுடன் யாசீர் மௌலவியின் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு என்னால் முடியுமான அனைத்து விடயங்களையும் இலவசமாக மேற்கொள்வேன் என பைசர் எம்.பி மேலும் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள யாசீர் மௌலவி தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இந்ந நிலையில் அனோஜனைக் காப்பறியது போன்று தன்னையும் காப்பற்றுங்கள் என யாசீர் மௌலவி உருக்காமான வேண்டுகோளொன்றை முன்வைத்து திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் இருந்து வீடியோவொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
