நாட்டின் பிரதான மீன் விற்பனை மையமான பேலியகொடை மீன் சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய, சுகாதாரமான மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காலி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பேலியகொடை மீன் சந்தை மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் காணப்படும் ஏனைய மீன் சந்தைகளையும் குடும்பத்தினர் மற்றும் சிறுவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி, சுத்தமான சூழலில் மீன்களைக் கொள்வனவு செய்யக்கூடிய இடங்களாக நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடற்றொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு கடற்றொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 15,400 மில்லியன் ரூபாய் மற்றும் ஏனைய அமைச்சுகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகளையும் இணைத்து மொத்தமாக 20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 24 மீன்பிடித் துறைமுகங்களையும் தாம் நேரில் பார்வையிட்டபோது, முறையான பராமரிப்பின்றிப் பல துறைமுகங்கள் பெயரளவிலேயே இயங்குவதை அவதானித்ததாகக் கூறிய அமைச்சர், அவற்றை நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சேவை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொதுச் சொத்துக்களான இத்துறைமுகங்களைப் பாதுகாக்க மீனவ மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் புரதச் சத்தை வழங்கும் மீனவ சமூகத்தின் அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சுமார் 22,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் குழுக்களின் இலக்காக மீனவ சமூகம் மாற்றப்படுவதைத் தடுக்க மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
