யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசேட உள்ளக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக, நிர்வாக மட்டத்திலும் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த 5 மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் பொலிஸார், மோதலுடன் தொடர்புடைய 21 மாணவர்களைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சில மாணவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த மோதல் வளாகத்திற்கு வெளியே இடம்பெற்ற போதிலும், பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். அத்துடன், மோதலுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
