நடப்பாண்டில் இதுவரை இடம்பெற்ற 2,330 உயிராபத்து வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
காணொளி ஒன்றின் மூலம் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த காலப்பகுதியில் 5,868 பாரிய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் காயமடைந்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினரின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 9,870 சிறு விபத்துக்களும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 4,488 விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களில் அதிகளவானோர் பாதசாரிகளாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 813 ஆகும். உயிரிழந்த பாதசாரிகளில் பெரும்பாலானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், பாதசாரிகளின் கவனயீனம் மற்றும் அஜாக்கிரதையே இவ்வுயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 168 பேர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவிச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் 165 பேரும், சாரதிகள் 190 பேரும், பயணிகள் 240 பேரும் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், உயிராபத்து விபத்துக்களின் எண்ணிக்கை 11 ஆல் அதிகரித்துள்ள போதிலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 ஆல் குறைந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
