தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறிவிட்டது. அரசாங்கத்தின் தற்போதை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆணை இல்லை. எனவே பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தை கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தினால் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது ஏற்பட்டுள்ள பொருளாதார வறுமை நிலையில் தங்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிவாரணங்கள் எதனையும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கவில்லை. 2022ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்தடைந்தது. அந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம் என்றுஅரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 2022இல் ஆட்சியை பெறவில்லை. 2024 செப்டம்பரிலேயே ஆட்சியை ஏற்றனர் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம். இப்போது பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 வீதமாக இருக்கின்றது. ஆனால் 2022ஆம் ஆண்டை விடவும் குறைவாகவே இருக்கின்றது. கடந்த 2 வருடங்களில் நீங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளீர்கள். நீங்கள் 2022ஆம் ஆண்டு தொடர்பில் இப்போது கதைக்கவேண்டாம்.
அத்துடன் 2024ஆம் ஆண்டில் நிதி கையிருப்பானது 6 பில்லியன் டொலராக இருந்தது. 2026ஆம் ஆண்டில் அது 7 பில்லியனாக இருக்கின்றது. இரண்டு வருடங்களில் ஒரு பில்லியன் டொலரை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 309 ரூபாவாக இருந்தது. இப்போது 424 ரூபாவாக இருக்கின்றது. அதேபோன்று டீசல் மற்றும் சமையல் எரிவாயு, பால்மா விலைகளும் 2024இல் இருந்ததை விடவும் அதிகமாகவே அதிகரித்துள்ளள.
அதேபோன்று பண வீக்கத்தை எடுத்துக்கொண்டால் 2024ஆம் ஆண்டில் 0.45 வீதமாக இருந்தது. இன்று அது 8.3 வீதமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுபார்த்தால் நீங்கள் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றீர்கள். 2024ஆம் ஆண்டில் டொலர் விலை 292 ரூபாவாக இருந்தது. இப்போது 337 ரூபா வரையில் அதிகரித்துள்ளது. அப்படியென்றால் எங்கே நீங்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்கின்றோம். அஸ்வெசுமவும் 10 இலட்சம் நீக்கப்பட்டுள்ளது. இவர்களால் இரண்டு வருடங்களில் தமது சட்டை பொத்தான்களை போட்டுக்கொள்ள முடியாமல் போனதை மட்டுமே செய்ய முடிந்துள்ளது. ஆனால் மக்களின் சட்டைகள் வயிற்றுடன் ஒட்டிப்போகும் அளவுக்கே உள்ளது.
ஜனாதிபதி பதவியும் பிரதமர் பதவியும் இருந்தால் நாட்டை செய்யலாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிடைத்துள்ளது. எனினும் நீங்கள் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பெரிய கனவு உலகத்தை உருவாக்கினீர்கள். இப்போது நீங்கள் ஈரான் யுத்தம் உள்ளிட்ட காரணங்களை கூறி காலம் கோருகின்றீர்கள். உங்களின் விஞ்ஞாபனத்தில் கூறியது இதுவல்ல. 6 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்புவதாகவே கூறினீர்கள். ஆனால் நீங்கள் அந்த விஞ்ஞாபனத்தை மீறியுள்ளீர்கள். இதனால் பாராளுமன்றத்தை கலைத்து புதிய விஞ்ஞாபனத்திற்கு போவோம் என்று நாங்கள் அரசாங்கத்திற்கு பிரேரணை முன்வைக்கிறோம் என்றார்.
