வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி முறையாக செலழிக்கப்படுகிறதா என தேடிப்பார்க்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனாலே கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகமான நிதி மிதப்படுத்தப்பட்டிருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி அரச முதலீடாக 2ஆயிரம் பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நிதி ஒதுக்குவதுடன் நின்றுவிடாமல் அந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்தவரும் நிந்தவூர் கலாசார நிலையத்துக்கு 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோதும் ஒரு ரூபா கூட செலவழிக்கப்படாமல் இருக்கிறது. இவ்வாறு பல வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பணம் செலவழிக்கப்படாமல் இருக்கிறது.
அதேபோன்று இந்தமுறை வடக்கு மீன்பிடி துறைமுகத்துக்கு 5பில்லியன் ரூபாவும் மீள்குடியேற்றத்துக்காக 4 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணமாவது முறையாக செலவழிக்கப்படுமா என தெரியவில்லை. அதேநேரம் மீன்பிடி துறைக்கு பணம் ஒதுக்கியுள்ளபோதும், அதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் எதுவும் இல்லை. வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதாக இருந்தால், அந்த வேலைத்திட்டம் எப்போது ஆரம்பிப்பது, எப்போது முடிவுக்கு வருவது. அதற்காக எத்தனை ரூபா ஒதுக்குவது என்ற விபரங்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அது தொடர்பில் நம்பிக்கை ஏற்படுகிறது.
மேலும் சிலாபத்தில் கலாசார நிலையம் ஒன்றை நான் அமைச்சராக இருக்கும்போது நிர்மாணிக்க ஆரம்பித்தேன். அதன் வேலைகள் முடிவடையாமல் இருக்கின்றன. அதனால் அதற்கு தேவையான பணத்தை ஒதுக்கி அதன் நிர்மாண பணிகளை முடிக்குமாறு பல தடவைகள், மாவட்ட ஒழுங்கமைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்பையும் மேற்கொள்ளப்பட வில்லை. இந்தமுறை வரவு செலவு திட்டத்திலும் ஒரு ரூபாகூட ஒதுக்கவில்லை.
அதேபோன்று கண்டி நெடுஞ்சாலை தொடர்பில் ஜனாதிபதி பெருமையுடன் தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதேபாேன்றுதான் யாழ்ப்பணத்தையும் புத்தளத்தையும் இணைக்கும் மன்னார் புத்தளம் வீதியும் முக்கியமானதாகும். இந்த வீதியை திறப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அல்லது ஆய்வு செய்து கரையோரமாக வீதி ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார், ஆனால் வரவு செலவு திட்டத்தில் ஒரு வார்த்தைகூட இதுதொடர்பில் தெரிவித்திருக்கவில்லை. இந்த பாதையை திறந்து தருவதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெரிவித்துவந்தார். அதனால் இந்த பாதையை மக்களுக்காக திறந்துவிட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. அதேபோன்று நாட்டில் கிழக்கு, வெங்காயம் இறுவடை செய்யும்போது, இறக்குமதி செய்யப்படுகிறது. இது அரசாங்கத்திடம் இது தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அனுபவம் இல்லாமல் செயற்படுவதாகவே தெரிகிறது. அண்மையில் லாப் கேஸ் நிறுவனம் எரிவாயு விலையை பாரியளவில் ஒரே நாளில் அதிகரித்திருந்தது. அவ்வாறு தனியார் நிறுவனங்கள் நினைத்த பிரகாரம் விலைகளை அதிகரிக்க முடியாது. அவ்வாறு செயற்பட்டால், நுகர்வோர் அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
