விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரமீஸின் காதி நீதிபதி நியமனத்துக்கு பிரதி சபாநாயகர் சிபாரிசு செய்தாரா?
📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால்
கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முஹம்மது ரமீஸை கொழும்பு வடக்கு காதி நீதிபதியாக நியமிப்பதற்கு தான் சிபாரிசு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி நிராகரித்தார்.
அத்துடன் காதி நீதிபதிகள் நியமனத்தில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு வடக்கு காதி நீதிபதியாக முஹம்மது ரமீஸ், கடந்த வருடம் ஜூன் மாதம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொழும்பு வடக்கு காதி நீதிபதியின் கடமை பொறுப்பேற்பு மற்றும் அலுவலக திறப்பு நிகழ்வு ஆகியவற்றில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஒரேயொரு அரசியல்வாதி இவரேயாவார். இதனால் கொழும்பு வடக்கு காதி நீதிபதியாக முஹம்மது ரமீஸ் நியமிக்கப்படுவதற்கு பிரதி சபாநாயகர் சிபாரிசு செய்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கட்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
காதி நீதிபதி ரமீஸின் கைதினைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு கடுமையாக பரவியது. இந்த நிலையில், “காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை” என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.
“காதி நீதிபதிகள் நியமனம், பத்திரிகைகளில் முறையான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்ட பின்னரே இடம்பெறுகின்றது. இதன் முழுமையான நியமனச் செயற்பாடுகளும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பொறுப்பிலேயே உள்ளன” என அவர் கூறினார்.
குறித்த காதி நீதிபதியின் அலுவலகத் திறப்பு விழாவில் தான் கலந்துகொண்டதாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த விருந்தினர் பதிவுப் புத்தகத்தில் (Visitors’ Book) அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே தனது கருத்தைப் பதிவு செய்ததாகவும் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி தெரிவித்தார்.
மேலும், குறித்த நபரின் குடும்பத்தினரும் பிள்ளைகளும் தனது நோயாளர்களாக இருந்த காரணத்தினாலேயே அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அரசாங்கப் பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் எவ்விதப் பரிந்துரைகளையும் தான் மேற்கொள்வதில்லை என்றும், குறிப்பாக காதி நீதிபதி போன்ற நீதித்துறை சார்ந்த நியமனங்களுக்குப் பரிந்துரை செய்வதில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார்.
விவாகரத்துத் தீர்ப்பை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்காக 65,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதி முஹம்மது ரமீஸ் மற்றும் அவரது மனைவி நஸ்ரினா ரமீஸ் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நேற்று முன் தினம் (18) புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று (19) வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
