நீதிமன்றத்தின் சட்டபூர்வமான பிடியாணையின்றி 1989 ஒக்டோபர் 12ஆம் திகதி காசல்வீதி பகுதியில் தாம் கடத்தப்பட்டதாகவும், மூன்று மாதங்களாகக் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் கண்பார்வை முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே விடுவிக்கப்பட்டதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தையும் கொண்டுவந்துள்ளது. எனவே மக்களின் துயரங்களையும் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பயண வழிகாட்டி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தையும் கொண்டுவந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி, மக்களின் சிவில் உரிமைகள், சுதந்திரம், மனித கண்ணியம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது முன்வைக்கப்படும் சட்டமூலங்கள் கடந்தகால அனுபவங்களை நினைவூட்டுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த நாடு. 1971ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி, 1983ஆம் ஆண்டிலிருந்து வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவிய பிரிவினைவாதப் பயங்கரவாதம், 1987–1989 காலப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக் கிளர்ச்சி, 2019ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் எனப் பல்வேறு சம்பவங்களால் உயிரிழப்புகளையும் சொத்திழப்புகளையும் எதிர்கொண்டோம். இளைஞர்களின் உயிர்கள் அழிந்தன , பொருளாதாரம் பாதிக்கப்பட்டது மற்றும் பலர் நாட்டைவிட்டு வெளியேறினர்.தீவுகள் ஆராயுங்கள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பாதுகாப்புப் படையினர் 26,000 பேரும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23,000 பேரும் நேரடிச் சமரில் உயிரிழந்தனர். மேலும் பலர் தமது சொந்த இடங்களை இழந்தனர். வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களும் சில முஸ்லிம் மக்களும் இன்னமும் தமது பகுதிகளுக்குத் திரும்ப முடியாத நிலை காணப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த தமிழ் குடும்பங்களும் அங்கு வாழ முடியாத நிலையை எதிர்கொண்டன. இந்த அநீதிகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.
1979ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாமலேயே தடுப்புக் காவல் உத்தரவுகளின் மூலம் ஒருவரை 90 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும். ஏற்கெனவே நாட்டில் குற்றவியல் சட்டங்களும் நடைமுறைகளும் பாதுகாப்புச் சட்டங்களும் உள்ள நிலையில், மேலும் புதிய சட்டங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
1989 ஒக்டோபர் 12ஆம் திகதி எந்தவொரு சட்டபூர்வமான முறைப்பாடும் இன்றி, நீதிமன்றத்தின் சட்டபூர்வமான பிடியாணையுமின்றி காசல் வீதியில் வைத்து நான் கடத்தப்பட்டேன். அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடத்தைச் சேர்ந்த பலருடன் நானும் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டேன். மூன்று மாதங்களாக எங்களது கண்கள் கட்டப்பட்டிருந்தன. இதனால் எனது கண்பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பரீட்சைகளில் தோற்றுவதற்காக 1990ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே எங்களை விடுவித்தனர். இது பிறர் கூறிய தகவல் அல்ல எனது சொந்த வாழ்க்கை அனுபவம்.
எமக்கு ஏற்பட்ட துயரங்கள் இன்றைய இளைஞர்களுக்கும் ஏற்படக்கூடாது. குறிப்பாக, புதிய தலைமுறையினரான ‘ஜென் சி’, ‘ஜென் அல்பா’ இத்தகைய நிலைக்கு ஆளாகக்கூடாது. மக்களின் துயரங்களையும் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரக்கூடாது.
அரசாங்கம் முதலில் கடந்தகாலக் கொலைகள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயக வழியில் நடைபெறும் வேலைநிறுத்தங்களையும் பல்கலைக்கழகப் போராட்டங்களையும் அடக்குமுறையால் எதிர்கொண்டால், அது மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும். அரசாங்கம் ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில் கிடைக்கும். அதற்கு மாறாகச் செயற்பட்டால் எதிர்வினைகளும் உருவாகும் என்றார்.
