(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெறும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும் பலவீனமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாகாணசபைத் தேர்தல் பற்றி ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவுக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வருகைத் தருவதில்லை. காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தின் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஜி.எஸ்.பி.வரிச்சலுகை
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028.12.31 ஆம் திகதி வரை இலங்கைக்கு கிடைக்கப்பெறும்.இந்த வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உபக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி வரிச்சலுகையுடன் தொடர்புடைய 27 ஒப்பந்தங்களுடன் புதிதாக ஐந்து உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் தொடர்பில் புதிதாக ஒரு உடன்படிக்கை சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கமையவாகவே ஒழுங்கமைக்கப்பட்;ட குற்றச்செயல்களை தடுத்தல் தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம்.
அதேபோல் போதைப்பொருள் தடுத்தல் தொடர்பிலும் புதிய உடன்படிக்கை உள்வாங்கப்பட்டுள்ளது. இலங்கையும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை உள்ளிட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இது குறித்தும் புதிய சட்டம் இயற்றப்படும்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்
பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை காட்டிலும் சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் காணப்படும் மோசமான ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் உள்வாங்கப்படவில்லை.பொலிஸ் அதிகாரி முன்னிலையில் வழங்கப்படும் வாக்குமூலம் நீதிமன்றில் சாட்;சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஏற்பாடு புதிய சட்டமூலத்தில் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்தல் மற்றும் தடுத்து வைத்தல் காலவகாசம் தொடர்பிலும் முற்போக்கான மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
மாகாணசபைத் தேர்தல்
மாகாணசபைத் தேர்தல் குறித்தும் எதிர்க்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். சட்ட சிக்கல்களுடன் தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற தேவை எமக்கும் உள்ளது. சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காகவே பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் செயற்குழுவில் முன்னிலையாகுவதில்லை. கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்துக்கு கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் வரவில்லை. யோசனைகளை முன்வைக்காமல் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ரோஹியன்கா முஸ்லிம் மக்கள் விவகாரம்
ரோஹியன்கா முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடயங்களை முன்வைத்தார். திருகோணமலை பகுதிக்கு வருகைத் தந்த ரோஹியன்கா முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக வரவேற்றோம்.தற்போது அவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தால் அவர்கள் தாராளமாக செல்லலாம்.அதில் எவ்வித தடையும் இல்லை.
பலஸ்தீனம் – இஸ்ரேல் இலங்கை நிலைப்பாடு
பலஸ்தீனம் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம். அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம்.
பலஸ்தீனம் சுயாதீன இராச்சியம் என்பது போன்று இஸ்ரேலும் சுயாதீன இராச்சியமாகும்.இரண்டு நாடுகளும் சுயாதீன இராச்சியமாகவே பார்க்கப்படுகிறது. இந்த விடயத்தில் இலங்கை பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையையே கடைப்பிடிக்கும் என்றார்.
தூதுவர்கள் நியமனம்
வெளிநாடுகளில் வெற்றிடமாகியுள்ள தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திர அலுவலர் ரோஹன அபகொல்ல எதிர்வரும் 27 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.
அதேபோல் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படும் நபர் எதிர்வரும் 28 ஆம் திகதி பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
அதேபோல் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.இது இலங்கை இராஜதந்திர வரலாற்றில் அமெரிக்காவுக்கான தூதுவராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவதாக கருதப்படும்.
ஜேர்மனி நாட்டுக்கான தூதுவர் இந்த ஆண்டுக்குள் நியமிக்கப்படுவார். வெளிநாடுகளுக்கான தூதுவர் நியமனங்களை அரசியல் நியமனங்களாக வழங்க முடியாது. அதற்கு முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் தீர்க்கமான ஒரு தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
