அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுங்கள்.
இலங்கை கிரிக்கெட் சட்டம் குறித்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.
முக்கிய ஆடவர் தொடர்களை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படவில்லை என அண்மையில் சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின என அறியக் கிடைத்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ளும் தேவை எம்மத்தியில் காணப்படுகின்றன. உருவாக்கப்பட்டு வரும் இச்சட்டத்திற்குள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியுமுள்ளது. எனவே ஊடகங்களில் வெளியாகும் இவ்வாறான விடயங்களைச் சமூகமயப்படுத்தாமல் சரியான விளக்கத்தை முன்வைக்குமாறு நான் ஆலோசனை முன்வைக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்கு வீரர்களாகப் பங்களிப்புச் செய்த திறமையான பலர் காணப்படுகின்றனர். ஆதலால் வீரர்களைத் தெரிவு செய்யும் சமயங்களில் முன்னாள் வீரர்களுக்குத் திறந்த ஆலோசனைகளை பெற்றுத் தருவதற்கு வாய்ப்பளித்துத் திறந்த களமொன்றை தாபியுங்கள். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவர் எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வரைஞர் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலகில் விளையாட்டுத் துறையில் சாதனை மேல் சாதனை படைத்த அணிகள் இருந்தன. அவற்றைப் பார்க்கும் போது 70-80 தசாப்தங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி திறமைக்கு முதலிடம் கொடுத்து முன்னேறின. திறமையான வீரர்கள் இருந்தபோதிலும் ‘அணி மனப்பான்மை இல்லை’ என்று கூறி அணியில் இணைத்துக் கொள்ளாத நிலை காணப்படுவதால், திறமைக்கு அதிக முன்னுரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பல வருடங்களாக ஒருசில குடும்பங்களும், குழுக்களும் அதிகாரத்தைச் செலுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த அரசியல்மயமாக்கலை இல்லாதொழிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், கண்ணுக்குத் தெரியாத விடயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கண்கூடாகத் தெரியும் திறமை, ஆற்றல் மற்றும் ஓட்டங்களைக் குவித்தல் ஆகிய விடயங்களில் வீரர்களைத் தெரிவு செய்யும் போது கவனம் செலுத்துமாறும், கிராமப்புறங்களுக்கு எதிரான பாரபட்சமும் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு மாத்திரம் ஆதரவான போக்கும் காணப்படுவதால், அவ்வாறான நிலைமைகளை விடுத்தும், இன மத பாராபட்சங்களை விடுத்தும், திறமையான வீரர்களுக்கு களம் கொடுக்கும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொதுவான வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டில் காணப்படும் அசுத்தங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அதற்கு இணங்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஆராய வேண்டும். அவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் நாம் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
