“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும்.” – இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“வெளிநாட்டு அமைச்சின் பிரதான நிதி ஒதுக்கீட்டில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்றாலும், போதிய நிதி வழங்கப்படாமையால் உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. செலவுக்கு ஏற்ற பெறுமதி கணக்காய்வை முன்னெடுத்துத் தேவையற்ற தூதரகங்களை மூடிவிட்டு, அத்தியாவசியமானவற்றுக்கு முழுமையான நிதியை வழங்க வேண்டும். ஜோர்தான் போன்ற சிறிய நாடுகளுக்கான பதவிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, சீனா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய முக்கிய நாடுகளுக்கான தூதுவர்கள் பதவிகள் ஏன் இன்னும் வெற்றிடமாக உள்ளன?
முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் என்ற வகையில், லக்ஷ்மன் கதிர்காமர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைப் போல், வெளிநாட்டுச் சேவையை அரசியல்மயமாக்கலிலிருந்து விடுவித்துத் திறமையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். அமைச்சரின் சர்வதேச ரீதியான செயற்பாடுகளைப் பாராட்டுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் இலங்கைக்கு உரிய பங்கைப் பெற்றுக்கொள்ள வணிக இராஜதந்திரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இலங்கையின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும், இரண்டு ஆண்டுகால விண்ணப்ப அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுவது சலுகை கிடைப்பதற்கான சட்டபூர்வ உத்தரவாதம் அல்ல.
இந்தியாவுடனான மீனவர் பிரச்சினையை முழுமையாக இராஜதந்திர ரீதியாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். மீனவர் முரண்பாடுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்காது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தபோதிலும், பழமை ஹோட்டல்கள் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்புக் குறைபாடுகளால் இலங்கை குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் வருமானம் 8 – 9 சதவீதம் அளவில் குறைவடைந்துள்ளது. குறைந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு 6.1 – 7.5 பில்லியன் டொலர் ஈட்டும் மாலைதீவுடன் ஒப்பிடுகையில், இலங்கை சுமார் 3 பில்லியன் டொலர் மட்டுமே ஈட்டுகின்றது. ஆகவே, நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் அரசு கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” – என்றார்.
