முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை பலவீனமானதாகவும், பரஸ்பர அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமை குறித்து கேள்வி எழுப்பினார்.
குறித்த விவாதம் பாகிஸ்தானுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அஜித் பி. பெரேரா தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கையுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிவரும் நாடுகளுடன் இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்திய ரவூப் ஹக்கீம், பாகிஸ்தான் நீண்டகாலமாக இலங்கையின் நட்பு நாடாக இருந்து வருவதாகவும், இலங்கை இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட பல சந்தர்ப்பங்களில் ஆதரவளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதித்த கட்டாய தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் வழங்கிய பங்களிப்பையும் அவர் நினைவுபடுத்தினார்.
கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டாய தகனக் கொள்கையை மாற்றியமைப்பதில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முக்கிய பங்காற்றியதாக ரவூப் ஹக்கீம் குறிப்பாகத் தெரிவித்தார்.
இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவர் மேற்கொண்ட தலையீட்டின் காரணமாக, அப்போதைய அரசாங்கம் குறித்த பாரபட்சமான கொள்கையை மாற்றியமைத்து, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இம்ரான் கானின் இந்தப் பங்களிப்பை இலங்கை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இதனை ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது? நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய ரவூப் ஹக்கீம், மற்றொரு நாட்டுடன் நட்புறவைப் பேணுவது, அந்நாட்டில் இடம்பெறுவதாகக் கூறப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதைத் தடுக்கக்கூடாது என்றார்.
குறிப்பிட்ட ஓர் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை எனத் தெரிவித்த அவர், வெளிவிவகாரக் கொள்கையானது பரஸ்பர அரசியல் நலன்களை விடவும் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பல சர்வதேச விவகாரங்களில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்தார். குறிப்பாக, பலஸ்தீன விவகாரத்தில் சர்வதேச அரங்குகளில் ஆதரவு தெரிவிக்கும் அறிக்கைகளை வெளியிடுவது மாத்திரம் போதாது என்றும், உள்நாட்டிலும் அதற்கான உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்த விடயத்தில் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கோரினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மூன்று அமைச்சுப் பொறுப்புகளுக்கும் மேலதிக செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்!
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய பொறுப்புகளும் காணப்படுவதால், அவருக்கு ஆதரவாக குறைந்தது மேலும் இரண்டு செயலாளர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.
மூன்று துறைகளினதும் பணிச்சுமையை ஒரேயொரு செயலாளரால் நிர்வகிப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அமைச்சின் செயலாளரை விமர்சிக்கும் நோக்கில் இந்தப் பரிந்துரையை முன்வைக்கவில்லை எனத் தெளிவுபடுத்திய அவர், தற்போதைய செயலாளர் வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரி எனவும் குறிப்பிட்டார்.
எனினும், மூன்று அமைச்சுப் பொறுப்புகளையும் ஒரேயொரு அதிகாரியால் வினைத்திறனுடன் நிர்வகிப்பது சிரமமானது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
