புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 8,640 சதுர மீற்றர் பரப்பளவில் ஆறு மாடிக் கட்டிடத்தை நான்கு ஆண்டுகளில் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சை மற்றும் குறுகியகால வதிவிட சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, நோயியல் மற்றும் ஆய்வுகூட வசதிகள் உள்ளிட்டவற்றை இந்தக் கட்டிடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, முதல் மூன்று மாடிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கட்டிட நிர்மாணக் கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், இந்திய அரசிடமிருந்து நன்கொடையைப் பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
