“சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனோஜனை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேரடியாகத் தலையீடு செய்ய முடியுமாயின், ஞானசார தேரரை ஏன் விடுதலை செய்ய முடியாது? அரசியல் நோக்கங்கள் மற்றும் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி செயற்படுகிறார்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,000 மில்லியன் ரூபாய் (2 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அந்த ஒதுக்கீடு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரச நிதியைச் சேமித்துள்ளோம் என்று குறிப்பிடுவதால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்காது.
பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாக அரசு குறிப்பிடுகின்றது. இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் நாட்டுக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் பின்னணியை அரசு இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் சம்பவத்தை அரசு முன்கூட்டியே அறிந்திருந்ததா என்பது எமக்குத் தெரியவில்லை.
வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் இதே விடயமே குறிப்பிடப்பட்டது. இருப்பினும், எந்தவோர் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.
சீனாவுடன் விசேட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன என்று அரசு குறிப்பிட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்தங்களுக்கு அமைய எவ்வித அபிவிருத்திக் கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கு முன்னர் சீனா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
சவூதி அரேபியாவில் மத அவமதிப்புக் குற்றத்துக்கான மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையரான அனோஜனைப் பாதுகாப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. அவரை விடுதலை செய்யும் நடவடிக்கையில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சவூதி அரசிடம் வலியுறுத்தினார். அதற்கமைய, அனோஜன் சிவராசா சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து அனோஜன் சிவராசா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பௌத்த நாடான இலங்கையில் ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.
