(எம்.எப்.எம்.பஸீர்,செ.சுபதர்ஷனி)
பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத்தின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளரின் பிணைக் கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வெள்ளிக்கிழமை (27) இந்த வழக்கு அழைக்கப்பட்ட போதே அவர் பிணை கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளசாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளரான சுமதிபால லியனாராச்சி சார்பில் கடந்த வழக்குத் தவணையின் போது முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை மீதான உத்தரவை வாசித்த நீதிவான், குறித்த பினை கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
பொஸ்பேட் இறக்குமதி செய்வதற்காக 3 தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு 81 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பாகச் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி ஆகியோருக்கு எதிராக மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
