குக் தீவுகளில் சிக்கியுள்ள இலங்கைப் பிரஜையான ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவைப் பாதுகாப்பாகவும் விருப்பத்துடனும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நியூசிலாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கெமரன் ப்ரூவருக்கு (Cameron Brewer) உத்தியோகபூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
குறித்த இலங்கைப் பெண்ணை பாதுகாப்பாகவும் அவரின் விருப்பத்தின் அடிப்படையிலும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு, தனிப்பட்ட ரீதியிலான தலையீட்டையும் விசேட மனிதாபிமான அடிப்படையிலான பரிசீலனையையும் மேற்கொள்ளுமாறு அந்தக் கடிதத்தின் ஊடாகக் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஆரம்பமானது முதல் நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
