ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) அஜ்மானில் இன்று (25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி, 2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. இதன் மூலம் 44 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சத்யா சந்தீபனி சிறப்பாகச் செயற்பட்டு, தனது 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
செத்தனா விமுக்தி, சுகந்திகா குமாரி, நிமாஷா மீபாகே மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அயர்லாந்து அணியின் சார்பில் அலானா டால்செல் 27 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் சார்பில் இமேஷா துலானி ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்தார். அவர் தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார்.
அத்துடன், சஞ்சனா கவிந்தி 22 பந்துகளில் 25 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
அயர்லாந்து அணியின் சார்பில் கியா மெக்கார்ட்னி மற்றும் காரா முரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான இலங்கை அணி, இறுதிப் போட்டியில் பெற்ற இந்த அபார வெற்றியின் மூலம் ஐசிசி வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் கிரிக்கெட் கிண்ணத்தின் சம்பியனாக முடிசூடியது.
