இங்கிலாந்துக்கு எதிராக லாகூர், கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்று ஆரம்பப் போட்டியில் ஒரு விக்கெட்டால் பாகிஸ்தான் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் தகுதிபெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் குவித்த போதிலும் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் குவித்த கன்னிச் சதம் அதனை விஞ்சியது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 242 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 47.1 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்க்ளைப் பெற்று வெற்றியீட்டியது.மேலும் கண்டறிக
பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. 34ஆவது ஓவரில் அதன் 9ஆவது விக்கெட் வீழ்ந்தபோது மொத்த எண்ணிக்கை வெறும் 154 ஓட்டங்களாக இருந்தது.
இதன் காரணமாக இங்கிலாந்து வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஷதாப் கான் துணிச்சலுடன் தனி ஒருவராகப் போராடி ஹரிஸ் ரவூப்புடன் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தார்.
தீவுகள் ஆராயுங்கள்
அரபாத் மின்ஹாஸ் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது (103 – 6 விக்.) எட்டாம் இலக்க வீரராக களம் நுழைந்த ஷதாப் கான் அதன் பின்னர் கடைநிலை வீரர்களின் ஆதரவுடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார்.
96 பந்துகளை எதிர்கொண்ட ஷதாப் கான் 13 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 113 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவரை விட சாத் பெய்க் (32), சல்மான் அகா (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெமி ஓவர்ட்டன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் டோசன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து பத்தாவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தது.
அப்போது பென் டக்கெட், சாம் கரன் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பை ஊட்டினர்.
பென் டக்கெட் 111 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களையும் சாம் கரன் 42 ஓட்டங்களையும் கஸ் அட்கின்சன் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஸாஉல்லா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷதாப் கான்
