காவந்திஸ்ஸ யானையின் மரணம் அதன் காலிலிருந்த நீண்டகாலப் புண் தீவிரமடைந்ததால் ஏற்பட்ட சிக்கல்களே பிரதான காரணம் என சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காவந்திஸ்ஸ யானையின் மரணத்தை பெரும் சர்ச்சையாக்கி அரசியல் இலாபம் ஈட்ட எதிர்க்கட்சிகள் பாரிய பிரயத்தனம் செய்தன. அந்த காரணங்கள் இப்போது தவிடுபொடியாகிவிட்டுள்ளன. அவ்வாறான நிலையில் காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”யானையின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கான சில அடையாளங்கள் காப்பட்ட போதிலும், அந்தத் துப்பாக்கிச் சூடுகள் மரணத்திற்கு காரணமாக அமைந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கு மேலதிகமாக, யானையின் உடலில் காணப்பட்ட மேலும் சில காயங்கள் ஏனைய காட்டு யானைகளுடன் ஏற்பட்ட மோதல்களால் ஏற்பட்டவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டின் வனஜீவராசிகள் திணைக்கள அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் தற்போது சுமார் 300 தந்தம் கொண்ட யானைகள் மாத்திரமே வாழ்கின்றன.
அவற்றில் கடுமையான உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள 17 யானைகள் மாத்திரமே உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் சுமார் முப்பது (30) தந்தம் கொண்ட யானைகள் தற்போதும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகச் சுற்றாடல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.”என கூறியுள்ளார்.
