செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த அறிக்கை இறுதியானதல்ல எனவும், அது வெறும் அகழ்வாராய்ச்சி அறிக்கை மாத்திரமே எனவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வின் போது இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாகவே உண்மையைக் கண்டறிய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சர்வதேச மட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.
செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனத் தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் நிச்சயம் உண்மை கண்டறியப்படும் எனவும் உறுதியளித்தார்.
