பலவந்த ஜனாஸா எரிப்பினை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (20) வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிப்பது தொடர்பான மூன்று பிரேரணைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அது தொடர்பான விடயங்கள் குறித்து விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; சுயாதீன இளைஞர் ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; காவந்திஸ்ஸ யானையின் மரணம், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் ஆகிய எனும் மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
