அரசியல் எதிரிகளை தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்காக குற்றவியல் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாகவும் அவர் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர, குற்றவியல் நீதித்துறை கட்டமைப்பைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை தகுதி நீக்கம் செய்யும் அரசாங்கம், அடுத்த தேர்தலில் மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கு நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதையே வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
“உங்களுடைய அரசியல் எதிரிகளை தேர்தலில் சந்திப்பதற்குத் துணிச்சல் கொள்ளுங்கள். யாரைத் தெரிவு செய்வது என்பதை மக்களிடமே விட்டுவிடுங்கள்” என அவர் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கவனம் செலுத்தினார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதவானுக்கு அதிகாரம் வழங்கும் ஏற்பாடு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய தயாசிறி, இவ்வாறான சான்றிதழ்களில் குறிப்பிடப்படும் உண்மையான காரணங்களை ஆராய்ந்து, ஒருவரைத் தடுத்து வைப்பதற்கு முன்னர் அவற்றின் நியாயத்தன்மையைப் பரிசீலிக்கும் போதிய அதிகாரம் நீதவான்களுக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளை, ஒவ்வொரு பிரஜைக்கும் தன்னைத் தடுத்து வைப்பதற்கான காரணங்களைச் சட்டரீதியாகச் சவால் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரித்த அரசாங்கத்தின் தீர்மானத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.
இந்த மாற்றங்களை ஏற்கனவே பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்குப் பொருந்தும் வகையில் மேற்கொள்ளாமல், எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மாத்திரம் அமுல்படுத்தியிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வுகளை நியமிக்கும் நடைமுறையில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, சிரேஷ்ட அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் தெரிவு செய்யப்படும் முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அமர்வுகளுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் முக்கிய வழக்குகளை விசாரிக்கத் தெரிவு செய்யப்பட்ட நீதிபதிகள் தொடர்பான பதிவுகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றை நினைவுகூர்ந்த தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் 1980 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை உரிமைகள் பறிக்கப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் எதிரிகளை தேர்தல் போட்டியிலிருந்து நீக்குவதற்கு சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்துவது, கடந்த காலத்தில் இடம்பெற்ற அதே தவறுகளை மீண்டும் செய்வதற்கு ஒப்பானது எனவும் அவர் எச்சரித்தார்.
“குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி ஓர் அரசியல் எதிரியை தேர்தல் போட்டியிலிருந்து நீக்க முயற்சித்தால், ஜே.ஆர். சிறிமாவுக்கு செய்ததையே நீங்களும் அந்த அரசியல் எதிரிக்குச் செய்கிறீர்கள்” என அவர் தெரிவித்தார்.
எனினும், 1994 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதை நினைவுபடுத்திய தயாசிறி,
“இறுதியில் வெற்றிச் சிரிப்பைச் சிரித்தவர் சிறிமா தான்” என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் சார்பைப் பொருட்படுத்தாமல் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்க ஆதரவாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
