வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள ‘கானி’ புயல், எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி இரவு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை ஊடாக இலங்கையைத் தாக்கக்கூடும் என வானிலை அவதானிப்பு மாதிரிகள் எதிர்வுகூறியுள்ளன.
மலேசியாவின் பிந்துலு பகுதிக்கு வடக்காக இன்று (25.11.2026) காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது நாளை மறுதினம் (27.11.2026) மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்குத் தெற்காகப் பயணிக்கும். பின்னர் மத்திய வங்காள விரிகுடாவை அடையும் போது அது புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலைதீவினால் பரிந்துரைக்கப்பட்ட ‘கானி’ (Kaani) என்ற பெயர் இப்புயலுக்குச் சூட்டப்படவுள்ளது.
தற்போதைய வானிலை மாதிரிகளின் கணிப்புப்படி, இப்புயல் எதிர்வரும் 05.12.2026 அன்று இரவு திருகோணமலையின் கொட்டியாரக்குடாவுக்கு வடக்காகக் கரையைக் கடக்கக்கூடும். அதனைத் தொடர்ந்து மேற்கு நோக்கி நகரும் இப்புயல், வவுனியாவை ஊடறுத்து மன்னார் மற்றும் புத்தளத்திற்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக வெளியேறி அரபிக் கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை முழுவதும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், இது இன்றைய நிலவரப்படியான வானிலை மாதிரிகளின் கணிப்பு மட்டுமே என்பதோடு, எதிர்வரும் நாட்களில் புயலின் பாதையில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சில வானிலை மாதிரிகள் இப்புயல் தமிழகக் கரையைக் கடக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், இலங்கை போன்ற ஒரு வளரும் நாட்டிற்கு இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் பாதிப்புகளிலிருந்தே நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இப்புயல் தொடர்பில் உரிய அரச திணைக்களங்கள் உன்னிப்பாக அவதானித்து மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ‘அக்வான்’ புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு முன்னாயத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், அது ஒடிசாவில் கரையைக் கடந்ததால் ஆந்திராவுக்குப் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. அதேபோன்று, அரசும் பொதுமக்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயாராக இருக்கும் பட்சத்தில், புயல் திசைமாறினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது; மாறாக புயல் இலங்கையைத் தாக்கினால் பாரிய சேதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள இத்தகவல்களின் அடிப்படையில் அவதானத்துடன் இருக்குமாறும், புயலின் நகர்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் அவ்வப்போது வழங்கப்படும் எனவும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
