பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலைகளிலேயே வைத்திருப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தட்டுப்பாடின்றி மக்களுக்குக் கோழி இறைச்சி வழங்கவும் கோழி இறைச்சியின் விலை ஏற்கனவே குறைவடைந்து வருவதாகவும் கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் வர்த்தக சங்கங்கள் தெரிவித்தன.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (23) வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. இதன் போது குறித்த சங்கங்கள் கூட்டாக இதனை தெரிவித்துள்ளன.
முட்டை மற்றும் கோழி இறைச்சி வர்த்தக சங்கங்கள் சிறிய மற்றும் பாரிய அளவிலான உற்பத்தியாளர் சங்கங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட இத்துறையுடன் தொடர்புடைய சகல தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சந்தையில் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் நிலைமை காணப்பட்டாலும் முட்டையின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் பண்டிகைக் காலத்தில் விலை அதிகரிப்பின்றி மக்களுக்கு முட்டைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் கால்நடைத் தீவன மூலப்பொருட்களின் பிரச்சினைகள் தீவனங்களின் தரம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் போதிய விஞ்ஞான ரீதியான அறிவு இன்மையால் சிறு அளவிலான பண்ணையாளர்களுக்குக் கால்நடைத் தீவனங்களைச் சரியான முறையில் சமநிலைப்படுத்திக் கொள்வது கடினமாக உள்ளதாகவும் அதன் விளைவாக அவர்களின் முட்டை உற்பத்தியில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் கண்டறியப்பட்டது.
இதற்கமைய கால்நடைத் தீவனங்களின் தரம் மற்றும் உரிய நியமங்களைப் பேணுவதற்கும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்களைப் பதிவு செய்வதற்கும் குறித்த உற்பத்தி நிலையங்களைப் பரிசோதிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் இதன்போது நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கினார்.
