(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நீதிமன்ற விடயங்களில் தலையிடமாட்டோம் என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறினாலும் மேலிடத்தில் இருப்பவர்கள் நீதிமன்ற விடயங்களில் தலையிடுகின்றனர். அதனாலே எங்களுக்கான பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தர்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நீதிமன்றத்தின் மீது கைவைக்கப்படாது என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால் கம்பஹா நீதிவான் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தார். இந்நிலையில் ஒருவாரத்தில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திறமையான 21 நீதிபதிகள் இப்போது பணி தடையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை.
நீதி அமைச்சர் அவ்வாறு செய்வதில்லை. அவருக்கும் மேலானவர்களே அப்படி செய்கின்றனர். இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அபாய கொடுப்பனவாக 40 ஆயிரம் ரூபா வழங்குவதாக கூறிவிட்டு அவர்களுக்கு 8ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று போதைப் பொருள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தொடர்பில் கூறுகின்ற போதும், சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அவ்வாறு விரைவாக நடத்தப்படுவதில்லை என்று கூறுகின்றனர்.
இதேவேளை கொழும்பு முதலாம் இலக்க நீதிமன்றத்தில் எனக்கு பிணை வழங்கும் போது மேல் நீதிமன்றத்தில் பிணையை நிராகரிக்க கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
எனக்கும் நாமலுக்கும் மட்டுமே இவ்வாறு பிணை நிராகரிப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. நீதவானின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். கொலைகளை செய்தவர்களையும் விடுவிக்கின்றனர். ஆனால் எங்களுக்கு பிணையை நிராகரிக்க கோரிக்கை விடுக்கின்றனர் என்றார்.
