(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதனால் அதற்கான உறுப்பினர்களை விரைவாக நியமித்து, எந்தவிதப் பாரபட்சமுமின்றி உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு முரணாகப் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி நான் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவந்திருந்தேன்.
இப்பிரேரணை, கடந்த ஆகஸ்ட் மாதம் சபையில் விவாதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் விசேட குழுவை நியமிப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இவ்விடயத்தை விரைந்து முன்னெடுக்குமாறு 20 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகரிடம் நாம் கோரிக்கைக் கடிதம் கையளித்தோம்.
எமது தொடர் முயற்சிகளின் பலனாக, கடந்த நவம்பர் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், பலவந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் இந்த அடுத்தகட்ட நகர்வுக்காக அரசாங்கத்திற்கும், சபாநாயகருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விசேட குழுவின் உறுப்பினர்களை விரைவாக நியமித்து, எந்தவிதப் பாரபட்சமுமின்றி உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை பல தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தின் கலை, கலாசார, கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகளில் பெரும் பங்காற்றி வருகின்றது. ஆனால், இன்று அந்தச் சேவை புறக்கணிக்கப்படுகின்றது. முஸ்லிம் சேவைக்கு இன்னும் ஒரு நிரந்தரப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. அங்கு ஆளணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன.
மிக முக்கியமாக, விளம்பரங்கள் மூலம் பல மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டும் முஸ்லிம் சேவையின், நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் முஸ்லிம் கலைஞர்களுக்குரிய கொடுப்பணவு வழங்குவதில்லை. எமது கலைஞர்களின் உழைப்புக்குரிய கொடுப்பணவை உடனடியாக வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு உரிய கண்ணியத்தை வழங்குங்கள் என்றார்.
