பேலியகொடை பிரதேசத்திலுள்ள சுங்கக் களஞ்சியசாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஹஷீஷ்’ ரக போதைப்பொருள் தொகுதியை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மூன்று பொதிகளில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான குறித்த பொதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றைப் பொறுப்பேற்க வரும் நபர்களைக் கைது செய்யும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த காலப்பகுதிக்குள் எவரும் அப்பொதிகளைப் பொறுப்பேற்க வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னிலையில் அவை திறந்து சோதனையிடப்பட்டன.
இதன்போது, 18 கிலோகிராம் 193 கிராம் எடையுடைய ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பிடப்பட்ட பெறுமதி 18 கோடியே 19 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா எனச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட சுங்க விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
