நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரிஜ்க்ஸ்மியூசியத்தின் (Rijksmuseum) சேகரிப்பிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு சுவர்த் துப்பாக்கிகளை (Wall Guns / Rampart Guns) இலங்கைக்குத் திருப்பி வழங்குவதற்கு நெதர்லாந்து இராச்சியம் தீர்மானித்துள்ளது.
குறித்த துப்பாக்கிகளின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அவற்றின் பூர்வீகம் தொடர்பாக ரிஜ்க்ஸ்மியூசியம், இலங்கை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ரியான் லெட்சர்ட் (Rianne Letschert), அந்நாட்டின் காலனித்துவ சேகரிப்புகள் தொடர்பான குழுவின் (Colonial Collections Committee) பரிந்துரையைப் பெற்ற பின்னர், அவற்றை இலங்கைக்குத் திருப்பி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டு நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தத் துப்பாக்கிகளின் வரலாற்றுப் பின்னணி, 2023ஆம் ஆண்டு இலங்கைக்குத் திருப்பி வழங்கப்பட்ட ஏனைய இரண்டு துப்பாக்கிகளின் பின்னணியுடன் ஒத்ததாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிகள் இலங்கைக்கே உரித்தான பாரம்பரியமான ‘மகா துவக்கு’ (Maha Thuwakku) வகையைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
1765ஆம் ஆண்டு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (VOC) மற்றும் கண்டி இராச்சியம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற ஆயுத மோதலின்போது இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அவற்றில் ஒரு துப்பாக்கியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், அது கண்டி மன்னருடன் தொடர்புடையது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தத் துப்பாக்கிகளை இலங்கைக்குத் திருப்பி வழங்குவதற்கான மேலதிக ஏற்பாடுகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் கலாசார மரபுரிமைகளை மீளப்பெறுவதற்கான இலங்கைக் குழுவுக்கும் (Committee for the Restitution of Sri Lankan Cultural Heritage Abroad), நெதர்லாந்தின் காலனித்துவ சேகரிப்புகள் தொடர்பான குழுவுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போயர் (Wiebe de Boer), Still Among Us என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வின்போது இந்தத் துப்பாக்கிகளை இலங்கைக்குத் திருப்பி வழங்கும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
அதே நிகழ்வில், குறித்த நூலின் பிரதியொன்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாற்று மற்றும் கலாசார மரபுரிமைகள் தொடர்பில் புதிய பார்வையை வழங்கும் இந்நூலில், இலங்கையைச் சேர்ந்த 11 அறிஞர்களினதும் நெதர்லாந்தைச் சேர்ந்த 11 அறிஞர்களினதும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் பாதுகாக்கப்பட்டு வரும் இலங்கையின் வரலாற்று மற்றும் கலாசார மரபுரிமைகளை மீளப்பெறும் முயற்சியில் இந்த இரண்டு துப்பாக்கிகளையும் திருப்பிப் பெறுவதற்கான தீர்மானம் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.தீவுகள் ஆராயுங்கள்
