(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி டில்லியில் இருநாட்டு அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வ காணவுள்ளோம் என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற அமர்வில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் கடற்றொழில், கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மீனவர்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளோம்.கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு மானிய விலைக்கு அமைய எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கடந்த 75 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்ததை போன்று குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் உள்ளக மற்றும் வெளியக சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னெடுத்துக் செல்கிறோம்.
கடற்றொழில் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் மாத்திரம் தீர்வு காண முடியாது.கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும்.அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்திய ரோலர் படகுகளால் எமது நாட்டின் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. அவ்வாறான செயற்பாடுகளை செயற்பாடுகளை நிறுத்துவதற்காக ஜனவரி 22ஆம் திகதி எமது செயலாளர் உள்ளிட்ட குழுவினர் டில்லிக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று எமது மீனவர்களின் கவலைகளை அறிந்தவர்கள் என்ற வகையில் மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்க்க முடியாவிட்டாலும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்றார்.
