இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ‘மீட்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி: இந்தியா – இலங்கை பொருளாதாரக் கூட்டாண்மை’ என்ற தலைப்பில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் 2026 நவம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற பொருளாதார மன்றத்தில் பிரதான உரையை நிகழ்த்தினார்
இலங்கை – இந்தியச் சங்கத்தினால் (SLIS) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பொருளாதார மன்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2. தனது உரையில், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து எதிர்கொண்ட சவால்கள், குறிப்பாக டித்வா (Ditwah) சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை வெளிப்படுத்தியுள்ள மீண்டெழும் ஆற்றல் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் எடுத்துரைத்தார்.
மேலும், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கடன் மறுசீரமைப்பில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் அண்மையில் இலங்கையின் இறையாண்மைக் கடன் தரமதிப்பீடு உயர்த்தப்பட்டமை ஆகிய விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
3. இலங்கை தனது பொருளாதார மீட்சிப் பயணத்திலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு இந்தியா தொடர்ந்தும் பங்காளராகச் செயற்படும் என்ற உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி உதவிகளை வழங்கியமை குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.
அத்துடன், டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விரிவான உதவித் திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு விசேட முக்கியத்துவம் அளித்து, இலங்கையின் நீண்டகால பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
4. பிரதான உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற குழுநிலை கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கை வர்த்தக வங்கியின் (Commercial Bank of Ceylon) முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, லங்கா ஐஓசியின் (Lanka IOC) முகாமைத்துவப் பணிப்பாளர் கே. ரகு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (Export Development Board) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடல் இலங்கை – இந்தியச் சங்கத்தின் உப புரவலர் கிஷோர் ரெட்டி அவர்களால் நெறிப்படுத்தப்பட்டது.
5. இலங்கை – இந்தியச் சங்கத்தின் புரவலர் என்ற வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார உறவுகளையும் வர்த்தக ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய புதிய முயற்சியை முன்னெடுத்தமைக்காக அச்சங்கத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் பாராட்டுத் தெரிவித்தார்.
