நாட்டில் நிலவும் பலத்த மழை வீழ்ச்சியினால் தெதுரு ஓயா, விக்டோரியா, தப்போவ மற்றும் லுணுகம்வெஹெர ஆகிய நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு (25) நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாடிக்கு 11,200 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதால், நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப்பகுதியில் தெதுரு ஓயாவை அண்டி வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தூனமலை பகுதியில் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
