மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – கலேவெல பகுதிக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக 240 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
இன்று (25) குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கலேவெலயில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – தம்புள்ளை பகுதிக்குள் உள்ளடங்கும் இந்தத் திட்டம், மூன்றரை வருடங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முழுமையான திட்டத்திற்கான நிதியும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ளாமல், உள்நாட்டு நிதி மூலங்களின் ஊடாகவே வழங்கப்படும் என நாமல் சுதர்ஷன தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் கடைப்பிடித்த நிதி ஒழுக்கம் மற்றும் பல்வேறு தியாகங்களின் ஊடாக இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
