மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (26) காலை 8.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம், உயிருக்கு ஆபத்தான வெள்ள நீரோட்டம், போக்குவரத்து பாதிப்பு, மண்சரிவு, பாறைகள் சரிதல் மற்றும் மண் அரிப்பு போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகளும் தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து அவதானித்து, வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும், ஆபத்தான பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
