கினிகத்தேனை, கடவல பகுதியில் இன்று (25) அதிகாலை கனரக வாகனம் ஒன்று பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சாரதி காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த 12 தொன் புன்னாக்கை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி தேயிலைத் தோட்டப் பள்ளத்தில் விழுந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சாரதி கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
