(க.நித்யதர்ஷனி)
எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வாகன விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துக்கள் நேற்று வியாழக்கிழமை (26) பதிவாகியுள்ளன.
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய – நோனாகம வீதியின் கிரலவெல்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
நோனாகம நோக்கிப் பயணித்த லொறியொன்று அதே திசையில் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர், பின்னால் பயணித்த பெண் மற்றும் சிறுமி ஆகியோர் காயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பின்னால் பயணித்த பெண்ணின் மகளான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
இதேவேளை தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புள்ளை – பக்கமூணை வீதியின் நான்காவது மைல் கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை நோக்கிப் பயணித்த கொங்கிறீட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட பாரவூர்தியொன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கந்தலம பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதியின் மாகும்புர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாவையிலிருந்து ஹோமாகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துக்கள் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, தம்புள்ளை மற்றும் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
