சாதியைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் அறிவித்ததாக வெளியான ஊடகச் செய்திகளை அமைச்சரின் அலுவலகம் மறுத்துள்ளது.
இன்று (25) வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், சில ஊடக நிறுவனங்கள் அமைச்சரின் கருத்துகளை முற்றிலும் தவறான சூழலில் எடுத்துக்கொண்டு, தவறாக வழிநடத்தும் தலைப்புகளுடன் செய்திகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாள் தேசிய விழிப்புணர்வு பிரசாரத்தை விளக்குவதற்காக, நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து இந்தத் தெளிவுபடுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சாதி போன்ற சமூக அடிப்படையிலான நிபந்தனைகளைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இத்தகைய விளம்பரங்கள் சமூகத்தின் சில பிரிவினரைத் துன்புறுத்தலுக்கும் பாகுபாட்டுக்கும் உள்ளாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும்போது சில விடயங்களைப் புறக்கணிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், குறிப்பாக சமூக ஊடகங்களில் மூடநம்பிக்கைகள், வசியம் மற்றும் மாந்திரீக நடைமுறைகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்கள் அதிகரித்து வருவதாகவும், இவை சமூகத்திலும் இளம் தலைமுறையினரிடத்திலும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைக் கோவையொன்றை உருவாக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களில் இத்தகைய விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கியிருந்தார்.
“மக்களின் மனப்பாங்குகள் மாற வேண்டும். எந்தவொரு சமூகமும் பின்னோக்கிச் செல்லாமல், முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும்” எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், அமைச்சரின் கருத்துகள் திருமண விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தையோ அல்லது எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிக்கவோ, கேள்விக்குட்படுத்தவோ, தடை செய்யவோ வேண்டும் என்ற நோக்கத்தையோ எந்த வகையிலும் வெளிப்படுத்தவில்லை என அமைச்சரின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
