நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மற்றும் இயந்திர அறைக்குள் நீர் புகுந்தமை காரணமாகச் செயலிழந்த ‘எம்.வி. ஏ.ஏ.எல் ஜிப்ரால்டர்’ (MV AAL Gibraltar) எனும் பொதுச் சரக்குக் கப்பலுக்கு அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் பாதுகாப்பான தஞ்சமளிக்கும் துறைமுகமாகச் செயற்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த 159.99 மீற்றர் நீளமுடைய இக்கப்பல், சுமார் 23,000 டொன் சரக்குகளைச் சுமந்து சென்ற நிலையில் இயங்க முடியாத கப்பலாக அறிவிக்கப்பட்டு, ‘எஸ்.பி.எம் அர்ஜுன்’ (SPM Arjun) எனும் மீட்பு இழுவைப்படகு மூலம் இலங்கை கடற்பரப்புக்கு இழுத்து வரப்பட்டது.தீவுகள் ஆராயுங்கள்
வணிகக் கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்தின் இணக்கப்பாட்டுச் சான்றிதழ், துறைமுகப் பொறுப்பதிகாரி மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) பரிந்துரைகளைத் தொடர்ந்து, நங்கூரமிடப்பட்டிருந்த பகுதியிலிருந்து கப்பலைத் துறைமுக வளாகத்திற்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ‘வருண’, ‘வசப’, ‘ராவண’ மற்றும் ‘பண்டுகாபய’ ஆகிய நான்கு இழுவைப்படகுகளின் உதவியுடன் கப்பல் பாதுகாப்பாகப் படகுத்துறைக்கு இழுத்து வரப்பட்டது.
துறைமுகத்திற்குள் நுழைவதற்கான உரிய அனுமதிகள் கிடைக்கும் வரை பல வாரங்களாக கடலில் நங்கூரமிட்டு நின்ற காலப்பகுதியில், துறைமுக நிர்வாகத்தினால் மூன்று தடவைகள் இக்கப்பலுக்குக் கடலிலேயே அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி ‘ராவண’ இழுவைப்படகு மூலம் கரையிலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் ஆய்வாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கப்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து ஒக்டோபர் 13 ஆம் திகதி மீட்பு இழுவைப்படகு எரிபொருள் நிரப்பிய 14 மணிநேர காலப்பகுதியில் ‘பண்டுகாபய’ மற்றும் ‘வருண’ ஆகிய படகுகள் பாதுகாப்பு ஆதரவளித்தன. பின்னர் ஒக்டோபர் 23 ஆம் திகதி ‘வருண’ படகு மூலம் 12 கடல் மைல் தொலைவில் உதிரிப்பாகங்களும் விநியோகிக்கப்பட்டன.
தற்போது இக்கப்பல் துறைமுகத்தின் தங்குமிடப் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலுள்ள அதன் உள்ளூர் முகவர் நிறுவனமான ‘செய்லைன் மரிடைம் சர்வீசஸ்’ (Ceyline Maritime Services (Pvt) Ltd) பழுதுபார்ப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றது. இருப்பினும், கப்பல் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பிரதான கிழக்கு-மேற்கு கடல்சார் நல்வழிப் பாதையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், மிதக்கும் பழுதுபார்ப்புகள், நீருக்கடியிலான சேவைகள், ஆய்வுகள், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட சகல கரையோர ஆதரவு வசதிகளையும் வழங்குகின்றது.
24 மணி நேரமும் தயார் நிலையிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு இழுவைப்படகுகளுடன் பிரத்தியேக அவசரகாலப் பதிலளிப்புப் பிரிவையும் கொண்டுள்ள இத்துறைமுகம், கடந்த 2020 செப்டெம்பரில் ‘எம்.டி நியூ டயமண்ட்’ கப்பல் தீ விபத்தின் போதும், 2022 பெப்ரவரியில் ‘வெஸ்ட் பொலாரிஸ்’ கப்பல் தீ விபத்தின் போதும் பாரிய கடல்சார் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
