(செ.சுபதர்ஷனி)
கொழும்பு – ஹேவலாக் சிட்டி சொகுசு தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தங்க முலாம் பூஸப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி அழைக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேற்படி வழக்க திங்கட்கிழமை (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ்ரனதுங்க முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி அழைக்கப்படும் எனவும், அன்றைய தினம் சாடச்சிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவுபிறப்பித்திருந்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹவ்லொக் சிட்டி சொகுசு தொடர்மாடி குடியிருப்பில், உரிய அனுமதிப் பத்திரமின்றி தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அஸ்குல் ஷெரகசினா என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண் ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் உள்ள பெண் ஒருவர், தமது வீட்டிற்குள் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றைக் கொண்டு செல்வதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தார். அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, பயணப்தொதி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
