பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை எவ்வித தட்டுப்பாடுமின்றி நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (23) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, மேலதிக செயலாளர் கில்மா தஹநாயக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சந்தையில் கோழி இறைச்சி விலை குறைந்து வருகின்ற போதிலும் முட்டை விலையில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதால், பண்டிகைக் காலத்தில் விலை அதிகரிப்பின்றி பொதுமக்களுக்கு முட்டையை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்தன. அத்துடன், தட்டுப்பாடின்றி கோழி இறைச்சியை வழங்குவதாகவும், அதன் விலை ஏற்கனவே குறைந்து வருவதாகவும் கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்தன.
எவ்வாறாயினும், கால்நடைத் தீவன மூலப்பொருட்கள், தரம் மற்றும் விஞ்ஞான ரீதியான அறிவுக் குறைபாடு காரணமாக சிறு அளவிலான பண்ணையாளர்களின் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமை இக்கலந்துரையாடலில் கண்டறியப்பட்டது. அதன்படி, கால்நடைத் தீவனங்களின் தரத்தைப் பேணுவதற்கும், தீவன உற்பத்தியாளர்களைப் பதிவு செய்து உற்பத்தி நிலையங்களைப் பரிசோதிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
