(க.சிவலிங்கமூர்த்தி)
கறுப்பு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே திட்டமிட்டு உருவாக்கிவிட்டு, அந்தப் பழியை மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான இடதுசாரி அரசியல் கட்சிகள் மீது சுமத்தி கட்சிகளை தடை செய்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் லெப்ட்லைன் நிகழ்ச்சியில் ‘திரிக்கப்பட்ட வரலாற்றில் கார்த்திகை மாதத்தின் நினைவுகள்’ எனும் தொனிப்பொருளில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
1977 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கையில் நிலவிய அரச நலன்புரிவாத ஆட்சி முறையை மாற்றித் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வருவதற்காகவே ஜனநாயக விரோத அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. புதிய பொருளாதார மாற்றங்களுக்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு எழும் என்பதை அறிந்திருந்த ஜே.ஆர். ஜயவர்தன, எதிர்ப்பாளர்களை நசுக்கிக் கொண்டே தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தார். ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலிருந்தே எதிரிவீர சரச்சந்திர போன்ற அறிஞர்கள் வீதியில் தாக்கப்பட்டதோடு, நீதிபதிகளின் வீடுகளுக்குக் கற்கள் வீசப்பட்டு நீதித்துறையின் சுதந்திரமும் சிதைக்கப்பட்டது.
