(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை)
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களை சாபம் என்று விமர்சித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியினர் இலவச கல்வியால் தான் முன்னேற்றமடைந்தார்கள். இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவை என்பது நடுத்தர மக்களுக்கு அத்தியாவசியதானதாக காணப்படுகிறது. இவ்விரு சேவைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி கடந்த 75 ஆண்டுகால அரசியல் முறைமையை விமர்சித்தே ஆட்சிக்கு வந்தது. இவர்கள் சாபம் என்று விமர்சிக்கும் அரசாங்கங்கள் தான் இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை இலவச சேவையாக சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தின
சுகாதாரம் மற்றும் கல்வியை இலவச சேவையாக்கியதன் பயனை நடுத்தர மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள். 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சிக்கும் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இலவச கல்வியால் முன்னேற்றமடைந்தார்கள் என்பதை மறக்க முடியாது.
சுகாதார சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. சுகாதார சேவை தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது. அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு கூட அரசாங்கம் வாய்ப்பளிப்பதில்லை. தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது.இதனால் தான் சுகாதார தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தாதியர்களும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இந்த போராட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் புறக்கணித்தே அரசாங்கம் செயற்படுகிறது.அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. கடந்த காலங்களில் பாராளுமன்ற ஊடகவியலாளர்களை பிரதமர், சபாநாயகர், சபை முதல்வர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடுவார்கள் ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை கிடையாது. ஊடகங்களை புறக்கணித்தே அரசாங்கம் செயற்படுகிறது.இது முற்றிலும் தவறானது என்றார்.
