தற்சமயம் துறைமுகத்தில் இறக்கப்படும் விலையில்
எரிபொருள் கிடைத்தபாடில்லை. 33% ஆல் மின்சார கட்டணம் குறைக்கப்படவுமில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் தொழில்கள் கூட வீழ்ச்சியடைந்துள்ள நமது நாட்டின் அரச கொள்கையானது, சட்டதிட்டங்கள் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதாகவே மாறியுள்ளன. மக்களுக்கு அரசியல் செய்வதற்கான உரிமைகள் கூட தற்சமயம் முற்றிலுமாக நீக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறி புதிய சட்டங்கள் மூலம் கூட்டங்களை நடத்துவது, அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பது, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது போன்ற உரிமைகளைக்கூட இல்லாமல் செய்து, அரச பயங்கரவாதத்தை நாட்டின் சட்டமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டம், மின்னேரியா தேர்தல் தொகுதி, அத்தனகடவல கோதுருவாவ கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
