நாடு முழுவதும் உள்ள அதிபர்கள் – ஆசிரியர்கள் எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்கவுள்ள சுகயீன விடுமுறை தொழில்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளில் நடைபெறுகின்ற தவணை பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ள தவணை பரீட்சைகள் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்குமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு, கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளிலுள்ளவர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தை எதிர்வரும் 30ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
”எதிர்வரும் 30ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை வலுவாகவே முன்னெடுக்க ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தோம். அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை தீர்ப்பது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எமது ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தோம். எமது எந்தவொரு கோரிக்கைக்கும் சாதகமான பதில் ஒன்று இந்த இடத்தில் எமக்கு கிடைக்கவில்லை. கட்டாயமாக எமது தொழிற்சங்க நடவடிக்கையை மிகவும் வலுவாகவே முன்னெடுப்போம் என்ற விடயத்தை தெளிவாகக் கூறிக் கொள்ள வேண்டும்.” என ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் 30ம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள தவணை பரீட்சைக்கான பொறுப்பை, கல்வி அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பங்ஞாசேகர தேரர் தெரிவிக்கின்றார்.
தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், வலய கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, எதிர்வரும் 30ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்ததை அடுத்து, முதலாம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக வருகைத் தந்து போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த என் பண்டார தெரிவிக்கின்றார்
