சுகாதாரம் மற்றும் கல்வியை அடிப்படை உரிமைகளாக மாற்றுவதற்கு 22ஆவது திருத்தம் போன்று துரித நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரம், தபால் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (25) உரையாற்றிய அவர், நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவத் துறையினரின் வெளிநாட்டு வெளியேற்றம், மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார சேவையில் நிலவும் கொடுப்பனவு பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 30,000 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் சுமார் 22,000 பேரே உள்ளதாகவும், 7,000 முதல் 8,000 விசேட மருத்துவ நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் 2,300 பேரே உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், மருத்துவத் துறையைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், DAT கொடுப்பனவு உள்ளிட்ட நிலுவைக் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குதல், மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணுதல் மற்றும் வைத்தியசாலைகளின் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
மேலும், சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்துதல், தேசிய போஷாக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், தொற்றாத நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் தபால் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஊடகத்துறையில் அரச ஒழுங்குமுறைக்கு பதிலாக சுய ஒழுங்குமுறையை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்த சஜித் பிரேமதாச, ஊடக அடக்குமுறையை தவிர்த்து ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
