சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவிதமான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றங்களைச் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சமூக ஊடகங்களில் தற்போது பேசப்பட்டு வரும் சீருடை வடிவமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பொலிஸ் சீருடையை மாற்றுவது மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும், பொலிஸ் சேவையில் அர்த்தமுள்ள மறுசீரமைப்புகளை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடையை மாற்றுவதன் மூலம் அவரது நடத்தை அல்லது பொலிஸ் கடமைகளை முன்னெடுக்கும் அணுகுமுறை மாறிவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் அமைதியைப் பேணுவதுடன், பொதுமக்களுடன் வலுவான உறவைக் கட்டியெழுப்பக்கூடிய பொலிஸ் படையணியொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தேவையான கல்வித் தகைமைகள் மற்றும் திறன்களைக் கொண்ட விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட அறிவும் திறமையும் மிக்க பொலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்குவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வெறுமனே சீருடையை மாற்றிக்கொண்டு தற்போதுள்ள பொலிஸ் கட்டமைப்பைத் தொடர்வதை விடுத்து, புதியதும் மேம்படுத்தப்பட்டதுமான பொலிஸ் சேவையொன்றே இலங்கைக்குத் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த 295 பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
