Our Feeds


Friday, April 11, 2025

SHAHNI RAMEES

ரணில், மஹிந்தவை முடிந்தால் கைது செய்து காட்டுங்கள் - சாமர சம்பத் சவால் #VIDEO:

 


முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரை முடிந்தால் கைது செய்து பாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற  உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,




இந்த அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் ஒரு முடியையேனும் அசைக்கப் போவதில்லை. பட்டலந்த பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தாலும் இதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை. அதிகாரிகளை கைது செய்யும் இந்த அரசாங்கம் அமைச்சர்களை கைது செய்வதில்லை.


திமிங்கிலங்களை விட்டுவிட்டு நெத்தலி மீன்களையே இந்த அரசாங்கம் பிடிக்கிறது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் நான் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். மற்றையவர்களான பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் மேர்வின் சில்வா ஆகியோர் தோல்வியடைந்தவர்கள். அவர்களை விடுத்து வேறு அதிகாரம் கொண்ட எவரையும் கைது செய்ய முடியவில்லை.


இப்போது பட்டலந்த தொடர்பில் கதைக்கின்றனர். பதுளை பொரலந்தலவிலும் முகாமொன்று இருந்தது. அங்கு இருந்த ஆட்காட்டும் தலையாட்டி பொம்மை யார்? இந்த அரசாங்கத்தின் அமைச்சரே இருந்துள்ளார். பெரும் சித்திரவதைகளை செய்த முகாமாகும். அங்கு இருந்த தலையாட்டி பொம்மை தற்போது அரசாங்கத்தில் இருக்கிறது.


அத்துடன் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரண பொதி தொடர்பில் கூறினர். அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த பொதியை காணவில்லை. மக்களை ஏமாற்றுகின்றனர். தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிந்தே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டது. புத்தாண்டு முடிந்த பின்னர் அந்த நிவாரண பொதி மீண்டும் வழங்கப்படுவதில்லை. மீண்டும் மாகாணசபை தேர்தல் நெருங்கும்போது நிவாரண பொதி வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.


மக்கள் விடுதலை முன்னணிக்கு என்ன நடந்துள்ளது என எங்களுக்கே தெரியும். பட்டலந்தவால் நீங்களே பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக்கொண்டுள்ளீர்கள். இந்த அரசாங்கத்தால் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை  ஒன்றும் செய்ய முடியாது.  முடியுமானால் கைது செய்து பாருங்கள்.


இந்த அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியுடையது என்பதனை மறந்து அந்தக் கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை மறந்து புதிய பயணத்தையே மேற்கொள்கின்றது. இப்போது அமெரிக்கா வரி அதிகரிப்பை செய்தது. பின்னர் 90 நாட்களுக்கு அதனை இடைநிறுத்தியுள்ளது. மக்களின்  அதிர்ஷ்டத்தால் இவ்வாறு அதனை டிரம்ப் இடைநிறுத்தியுள்ளார். இல்லையென்றால் நிலைமைகளை பார்த்திருக்கலாம். இவர்களால் எதுவும் முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »