இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் நாடு என்ற ரீதியில் பிரிதொரு நாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.
கண்டியில் திங்கட்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவை தொடர்பில் நாட்டுக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சியிலிருந்த போது இராஜதந்திர ஒப்பந்தங்கள் தொடர்பில் கூறிய கதைகள் இன்றும் எமக்கு நினைவில் இருக்கின்றன.
அந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் 5 ஆண்டு கால வரையறைக்கு அப்பால் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் உரிமை கிடையாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அவ்வாறெனில் இந்த பிரதமர் நாட்டுக்க வருகை தந்து கையெழுத்திடவுள்ள ஒப்பந்தங்கள் என்ன? அவை தொடர்பில் மறைப்பதை விட பகிரங்கமாகக் குறிப்பிடுவதே உசிதமானதாகும். சம்பூர் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் அதானி நிறுவனம் இரத்து செய்துள்ள வேலைத்திட்டத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனவே இவற்றின் உண்மை தன்மையை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்துவமாறு வலியுறுத்துகின்றோம். இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவது தொடர்பிலோ, பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால் நாடு என்ற ரீதியில் பிரிதொரு நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகின்றது எனில் அது தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.