35 ஆண்டுகால பழமையான ஒரு விடயத்துக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்குமாயின் அதற்காக முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதற்கும் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்கும் எவரேனும் முயற்சித்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சுமார் 35 ஆண்டுகாலத்துக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பில் தற்போது விவாதிக்கப்படுகிறது. விமர்சனங்களின் பின்னர் நாட்டின் சட்ட செயலொழுங்கு முறைமை தொடர்பில் இறுதியில் கேள்வியெழும். பட்டலந்த விசாரணை அறிக்கையில் 361 ஆவது பக்கத்தில்' அக்காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினால் தோற்றுவிக்கப்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்ற செயற்பாட்டுக்கு அப்பாற்பட்டுள்ளதை கருத்திற்கொள்வது கவலைக்குரியது.
மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாதம், அரச பயங்கரவாத தோற்றமாக மாற்றமடைந்தது. உண்மையான பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டார்கள். அப்பாவியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த காலப்பகுதியில் ஆளும் தரப்பின் அரசியல் பிரமுகர்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டுள்ளார்கள். ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு பட்டலந்த விவகாரம் ஒரு உதாரணம் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விடயங்களை மனதில் கொண்டு இந்த அறிக்கை தற்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். பட்டலந்த சித்திரவதை முகாம் ஏன் தோற்றம் பெற்றது என்பதையும் ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. பொலிஸார் முறையற்ற வகையில் தமது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதை போன்று அப்போதைய சூழ்நிலையையும் ஆராய்ந்து அது குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
35 ஆண்டுகால பழமையான ஒரு விடயத்துக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்குமாயின் அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
இந்த அறிக்கையை தமது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த எவரேனும் முயற்சித்தால் நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தாக்குவதற்கு இந்த அறிக்கையையும், உயிரிழந்தவர்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.